செவ்வாயில் பவளப்பாறை போன்ற பாறை கண்டுபிடிப்பு!
செவ்வாய் கோளில் பவளப்பாறையை ஒத்த அமைப்புடைய பாறை ஒன்றை நாசாவின் கியூரியாசிட்டி (Curiosity) ஆய்வு ஊர்தி கண்டறிந்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு, பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் நீர் ஓடியிருக்கலாம் என்பதற்கான புதிய ஆதாரமாக விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.
பூமிக்கு அடுத்துள்ள கோள்களில் செவ்வாய், ஆராய்ச்சிக்குப் பொருத்தமான சூழலைக் கொண்டிருப்பதால், பல ஆண்டுகளாக உலக நாடுகள் அங்கு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, நாசா 2011-ஆம் ஆண்டு கியூரியாசிட்டி ஆய்வு ஊர்தியை செவ்வாய்க்கு அனுப்பியது. தற்போது அது கேல் (Gale) பள்ளத்தில் கற்கள் மற்றும் மண் மாதிரிகளை ஆய்வு செய்து வருகிறது.
அண்மையில் பதிவு செய்யப்பட்ட படங்களில், பவளப்பாறையைப் போன்ற தோற்றமுடைய பாறை அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. விஞ்ஞானிகளின் விளக்கப்படி, பண்டைய காலத்தில் நீர் பாறைகளின் மீது ஓடியதால் உருவான தடங்கள், பின்னர் நீர் வற்றிய பிறகும் நீடித்து இருக்கலாம். காலப்போக்கில் சுற்றியுள்ள மண் மற்றும் மென்மையான பாறைகள் காற்றால் அரிக்கப்பட்டாலும், உறுதியான பகுதிகள் மட்டும் எஞ்சுவதால் இவ்வாறான வடிவங்கள் உருவாகின்றன.
பூமியிலும் இதுபோன்ற பாறை அமைப்புகள் காணப்படுவதால், இந்தக் கண்டுபிடிப்பு செவ்வாயின் புவியியல் வரலாற்றை புரிந்துகொள்வதற்கும், அங்கு நீர் இருந்ததற்கான ஆதாரங்களை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
0
Leave a Reply