அங்கன்வாடி தொடக்க நாளிலேயே நலத்திட்டங்கள் முழுமையாகக் கிடைப்பதை உறுதி செய்ய அதிகாரிகள் நேரடிக் கண்காணிப்பு.
விருதுநகர் மாவட்டத்தில் 2026–2027ஆம் கல்வியாண்டு தொடங்குவதை முன்னிட்டு, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு விலையில்லா கல்வி உபகரணங்கள், சீருடைகள் மற்றும் நலத்திட்டப் பொருட்கள் வழங்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.
அதனைத் தொடர்ந்து, நாளை (04.06.2026) மாவட்டம் முழுவதும் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்படவுள்ள நிலையில், 1,504 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகள் மற்றும் முன்பருவக் குழந்தைகளுக்கு வழங்கப்படவுள்ள விலையில்லா சீருடைகள், மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்களின் இருப்பு நிலையை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (03.06.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1,504 அங்கன்வாடி மையங்களில் சீருடைகள் மற்றும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் விநியோகம்:
விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் (ICDS) கீழ் 1,427 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 77 குறு அங்கன்வாடி மையங்களும் என மொத்தம் 1,504 அங்கன்வாடி மையங்கள் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
விலையில்லா சீருடைகள்:
மே-2026 கோடை விடுமுறை முடிந்து இம்மையங்களில் சேர்ந்து பயிலும் 2-3 வயது, 3-4 வயது மற்றும் 4-5 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு குழந்தைக்கு 2 செட் (2 Set) வீதம் புத்தம் புதிய சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கல்வி உபகரணங்கள் மற்றும் கற்றல் கையேடுகள்:
குழந்தைகள் அதிக அளவில் அங்கன்வாடிகளில் சேர்ந்து பயில்வதை ஊக்குவிக்கும் நோக்கில், அனைத்து 1,504 மையங்களுக்கும் (1,427 முதன்மை அங்கன்வாடி மையங்கள் மற்றும் 77 குறு அங்கன்வாடி மையங்கள்) முன்பருவக்கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தைகளின் செயல்திறன் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிப்பதற்காக, *வயது வாரியான செயல்பாட்டுப் புத்தகங்கள், விவரத்தொகுப்பு (Portfolio), ஆய்வு அட்டைகள் மற்றும் முன்பருவக்கல்வி நிறைவுச் சான்றிதழ்கள் ஆகியவையும் அனைத்து மையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சூடான சத்துணவு மற்றும் தினசரி ஊட்டச்சத்து அட்டவணை:
அங்கன்வாடி மையங்களில் பயிலும் முன்பருவக் குழந்தைகளுக்குக் காலை மற்றும் மதிய வேளைகளில் சத்துமிக்க உணவுகள் தடையின்றி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது:
காலை உணவு:
தினசரி காலை வேளையில் குழந்தைகளுக்கு 50 கிராம் அளவிலான கொழுக்கட்டை அல்லது இணை உணவு உருண்டை வழங்கப்படுகிறது.
மதிய உணவு:
திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் மதியம் சூடான சமைத்த கலவை சாதம்/மதிய உணவு வழங்கப்படுகிறது.
வாரம் முழுவதும் கூடுதல் ஊட்டச்சத்து:
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வாரத்தில் 3 நாட்கள் முட்டை, செவ்வாய்க்கிழமைகளில் பாசிப்பயறு, வெள்ளிக்கிழமைகளில் உருளைக்கிழங்கு மற்றும் 1 நாள் கொண்டைக்கடலை (சுண்டல்) ஆகியவை மதிய உணவுடன் சேர்த்துத் துல்லியமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் வட்டார கள அலுவலர்கள் அனைத்து வட்டாரங்களிலும் உள்ள அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருகின்றனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை அருகில் உள்ள அங்கன்வாடி மையங்களில் சேர்த்துப் பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் அரசின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து நலத்திட்டங்களின் பயனை முழுமையாகப் பெறுவதோடு, புதிய கல்வியாண்டின் முதல் நாளிலிருந்தே எவ்விதக் குறையுமின்றி, சிறந்த கற்றல் சூழலைப் பெறுவதை உறுதி செய்ய விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்தி வருகிறது.
0
Leave a Reply