விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு கள ஆய்வு
விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் பள்ளிகளில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் நேரில் சென்று (14.06.2025) சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் மாணவர்கள் 100 சதவிகிதம் பள்ளி படிப்பை முடிப்பதற்கும், பள்ளி படிப்பு முடித்து உயர் கல்வி சேர்வதையும் உறுதி செய்யும் வகையில் பல்வேறு முன்னெடுப்புகள் மாவட்ட நிர்வாகம் மூலம் எடுக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.தற்போது 1495 மாணவர்கள் தொடர்ச்சியாக பள்ளிக்கு வராமல் இடைநிற்றல் மாணவர்கள் மாவட்டம் முழுவதும் கண்டறியப்பட்டுள்ளனர். அவர்களை கண்டறிந்து மாணவர்களின் வீட்டிற்கு நேரில் சென்று குறைகளை கேட்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிப்படிப்பை தொடர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் வகையில் மாவட்ட அளவிலான உயர் அலுவலர்கள் இன்று முதற்கட்டமாக கள ஆய்வு மேற்கொண்டனர்.அதன்படி முதற்கட்டமாக அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 8 மாணவர்களும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 61 மாணவர்களும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 103 மாணவர்களும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 10 மாணவர்களும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 47 மாணவர்களும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 22 மாணவர்களும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 97 மாணவர்களும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 105 மாணவர்களும், என மொத்தம் 453 இடைநிற்றல் மாணவர்களை மாவட்ட அளவிலான அலுவலர்கள் நேரில் சந்தித்து நான் பள்ளிக்கு வராத காரணங்களை கண்டறிந்து அவர்களுக்கு உரிய அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த குழுவில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை), கூடுதல் காவல் கண்காணிப்பாளர், வருவாய் கோட்டாட்சியர்கள், உதவி இயக்குநர் ஊராட்சிகள், துணை ஆட்சியர்கள், துணைக்காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர்கள் உட்பட 80 அரசு அலுவலர்கள் ஒவ்வொரும் தனித்தனியாக இடைநின்ற மாணவர்களை நேரில் சென்று சந்தித்து, இடைநிற்றலுக்கான காரணங்கள், குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்வதற்கான கள ஆய்வினை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி, விருதுநகர் ஊராட்சி மற்றும் விருதுநகர் நகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளிகளில்; இடைநிற்றல் ஆன 5 மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று சிறப்பு கள ஆய்வு மேற்கொண்டார்.
இந்த கள ஆய்வின் போது, 5 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிக்கு செல்லாத காரணங்களை கேட்டறிந்தார். மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சொல்கின்ற காரணங்களின் அடிப்படையில், அவர்களுக்கு உரிய வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டு, பள்ளியில் சேர்வதை உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி, நிதியுதவி, மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான ஆலோசனைகள் வழங்குதல், சிறப்பு வகுப்புகள் எடுத்தல், ஆர்வமின்மையை போக்கி மீண்டும் பள்ளியில் சேர்த்தல், புலம்பெயர்ந்தவர்களை கண்டறிந்து உரிய வழிகாட்டுதல், கல்வியின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு இடைநிற்றல் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply