முதுமையை உற்சாகமாக எதிர்கொள்ளுங்கள்.
முதுமை என்பது வாழ்க்கையின் சுமை அல்ல. அது அனுபவங்களின் பொக்கிஷம், உடலுக்கு மட்டுமே முதுமை; மனதை இளமையாக வைப்பவர்களுக்கு எந்நாளும் இளமைதான். முதுமை என்பது ஒரு மலை ஏறுவது போன்றதுதான். மூச்சு வாங்கினாலும் மேலிருந்து பார்க்கும் காட்சி மிக அழகாக இருக்கும்.
முதுமையில் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று விரக்தியாகாதீர்கள். செய்வதற்கு எண்ணற்ற வேலைகள் இருக்கின்றன.
"நமக்கு எல்லாம் தெரியும்' என்ற கர்வத்தைத் துடைத்துவிட்டு ஏதுமறியாக் குழந்தை போல் மாறினால் போதும். அந்த மகிழ்ச்சியானது அளவற்ற சுதந்திரத்தைக் கொடுக்கும்.
நாவடக்கம் இந்த வயதில் தேவையான ஒன்று. அதாவது பேசும் வார்த்தைகளிலும் உணவை எடுத்துக்கொள்ளும் விதத்திலும் நாவடக்கம் தேவை.
மனதை அமைதியாக்குகிற சக்தி கலைகளுக்கு உண்டு. இசை, ஓவியம், தியானம், எழுத்து, கவிதை என்று ஏதாவது ஒன்றில் ஈடுபடலாம்.
இறுதிக்காலம் வரை யாருடைய தயவையும் எதிர்பார்க்காத வகையில் வாழ்க்கையை நடத்துகிற அளவுக்கு சேமிப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
முதுமையில் சில உடல் உபாதைகள் நிச்சயம் உண்டாகும். இந்த உடல் உள்ளவரை இன்ப, துன்பங்கள் நிச்சயம் உண்டு. அதனால் தளர்ந்து போகாமல் வாழ்வதுதான் மேன்மை.
ஆமாம்... வாழ்க்கை ஓர் ஓவியம். அதனை அழகாக்குவது நம் கைகளில்தான் உள்ளது. தீதும் நன்றும் பிறர் தர வாரா!
0
Leave a Reply