இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்.ஆனைமுகனும் அருகம்புல் வழிபாடும்.
ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மலர் அல்லது இலை விசேஷமாகக் கருதப்பட்டு படைக்கப்படுகிறது. சிவபெருமானுக்கு வில்வம், பெருமாளுக்கு துளசி, அனுமனுக்கு வெற்றிலை, அம்மனுக்கு வேப்பிலை என வழிபாட்டில் முக்கியத்துவம் பெற்றுள்ளன. அதுபோல விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்ததாக அருகம்புல் கருதப்படுகிறது.
முன்னொரு காலத்தில் அனலாசுரன் என்ற அசுரன் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன. அவன் தனது உடலில் இருந்து நெருப்பைக் கக்கி, தேவர்கள், முனிவர்கள் மற்றும் மக்களைத் துன்புறுத்தி வந்தான். இதனால் கவலை அடைந்த தேவர்கள், விநாயகப் பெருமானிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற விநாயகர், அனலாசுரனுடன் போரிட்டார். விநாயகர் ஏவிய அனைத்து ஆயுதங்களையும் அனலாசுரன் நெருப்பைப் பயன்படுத்தி சாம்பலாக்கினான். இதையடுத்து விநாயகர், அனலாசுரனை சிறிய உருவமாக மாற்றி விழுங்கிவிட்டார்.
ஆனால் அனலாசுரனின் கடுமையான வெப்பத்தால் விநாயகரின் வயிறு எரிச்சலடைந்தது. இதனால் அவர் வேதனை அடைந்தார்.
விநாயகரை குளிர்விக்க தேவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். வருண பகவான் மழையைப் பொழிந்தார். இந்திரன் சந்தனத்தைப் பூசினார். அன்னை பார்வதி, பாற்கடலை விநாயகர் பக்கம் திருப்பிவிட்டார். சிவபெருமான் குளிர்ச்சியான பாம்பை விநாயகரின் இடுப்பைச் சுற்றிக் கட்டினார். ஆனால் இவை அனைத்தும் பலனளிக்கவில்லை.
இதையடுத்து தேவர்கள், காஷ்யப முனிவரின் உதவியை நாடினர். காஷ்யப முனிவர் 21 அருகம்புல் கற்றைகளை விநாயகரின் தலையில் வைத்தார். உடனே விநாயகரின் உடல் வெப்பம் தணிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மகிழ்ந்த விநாயகப் பெருமான், அருகம்புல்லைத் தனது வழிபாட்டில் சிறப்பிடம் பெறச் செய்ததாக ஐதீகம். அன்றுமுதல் விநாயகர் வழிபாட்டில் அருகம்புல் முக்கிய இடம் பிடித்ததாக புராணங்கள் தெரிவிக்கின்றன.
0
Leave a Reply