சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியினை தொடங்கி வைத்தார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.செல்வம் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட புல்லலக்கோட்டை நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 1,33,475 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியினை (28.06.2026) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தமிழகத்தை மருத்துவ உட்கட்டமைப்பில் இந்தியாவிற்கே முதன்மை மாநிலமாகவும், அனைத்து தரப்பு மக்களுக்கும் சமூக, பொருளாதார வேறுபாடின்றி உயர்தரமான மருத்துவ சேவையினை வழங்குவதில் முன்னுதாரமான மாநிலமாக திகழும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறையின் மூலம் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.போலியோ (Poliomyelities) என்பது போலியோவைரஸ் (Poliovirus) மூலம் பரவும் ஒரு ஆபத்தான தொற்று நோயாகும். இது நரம்பு மண்டலத்தை பாதித்து, உடலை முடக்குவாதம் (Paralysis) அடையச் செய்துவிடும். இது பொதுவாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது.
இந்நோய்க்கு எந்தவிதமான சிகிச்சையோ அல்லது நிரந்தர மருந்தும் இல்லை. சொட்டு மருந்து மற்றும் தடுப்பூசிகள் (Oral Polio Vaccine & Inactivated Polio Vaccine) மட்டுமே நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் ஒரே வழியாகும்.பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். குழந்தைக்கு ஏற்கனவே வழக்கமான போலியோ மற்றும் பிற தடுப்பூசிகளை போட்டிருந்தாலும், அரசு நடத்தும் போலியோ முகாம்களில் மீண்டும் சொட்டு மருந்து கொடுக்கலாம்.குழந்தை ஆரோக்கியமாக இருந்தாலும், லேசான சளி அல்லது காய்ச்சல் இருந்தாலும், மருத்துவர் வேறு சிகிச்சைக்கு அறிவுறுத்தாத வரை பொதுவாக சொட்டு மருந்து கொடுக்கலாம்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் என 1,137 மையங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் என 4,580 பணியாளர்கள் மூலம் 1,33,475 குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.
மேலும், 74 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் வாழ் இலங்கைத் தமிழர் குடியிருப்பு பகுதிகள், நரிக்குறவர்கள் மற்றும் தற்காலிக குடியிருப்பு பகுதிகளில் வசிக்கின்ற குழந்தைகளுக்கும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்.
இதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோவிலிருந்து பாதுகாப்பு அளிப்பது போலியோ வைரஸ் பரவாமல் தடுப்பது அனைத்து குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து கிடைப்பதனை உறுதி செய்திடவும் போலியோ இல்லாத நாடு என்ற நிலையினை அடைந்திடவும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படுகிறது. இம்மருந்தானது மிகவும் பாதுகாப்பானதாகும்.
அனைவரும் தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை செலுத்தி, நோய்த்தொற்றிலிருந்து பாதுகாத்து ஊனமில்லாத சமுதாயத்தினை உருவாக்கிட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார். முகாமில் மாவட்ட சுகாதார அலுவலர் யாசோதா தேவி உட்பட மருத்துவ அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
0
Leave a Reply