பாரா வில்வித்தை: ஷீத்தல் தேவி தங்கம்.
ஆமதாபாத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா வில்வித்தை சீரிஸ் ‘ஸ்டேஜ்-3’ போட்டி நடந்தது. இந்தியா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட 19 நாடுகளைச் சேர்ந்த 109 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நேற்று நடைபெற்ற கடைசி நாள் போட்டிகளில் பல்வேறு பிரிவுகளுக்கான இறுதிப் போட்டிகள் நடந்தன. ‘காம்பவுண்டு’ தனிநபர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு உலக சாம்பியனும், உலகின் ‘நம்பர்-1’ வீராங்கனையுமான இந்தியாவின் ஷீத்தல் தேவி, கஜகஸ்தானின் அய்ஜடா செய்டனை எதிர்கொண்டார்.
முதல் நான்கு செட்கள் முடிவில் ஷீத்தல் 115-116 என பின்தங்கினார். கடைசி செட்டில் 29-28 என முன்னிலை பெற்ற அவர், ஸ்கோரை 144-144 என சமன் செய்தார். இதையடுத்து வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘ஷூட்-ஆப்’ நடத்தப்பட்டது. இதில் ஷீத்தல் 10-9 என வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
‘ரீகர்வ்’ கலப்பு அணிகள் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் ஹர்விந்தர் சிங்–பாவ்னா ஜோடி, சீனாவின் லியாம்–ஜியா லெய் ஜோடியை 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றது.
ஒட்டுமொத்தமாக இந்திய அணி 4 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை வென்றது.
0
Leave a Reply