கால மாற்றத்தால் வீழ்ச்சியடையும் ராஜபாளையம் வெல்ல உற்பத்தி: கரும்பு சாகுபடியைக் குறைக்கும் விவசாயிகள்.
ரசாயனம் கலக்காத இயற்கை வெல்லத்திற்கு மக்களிடம் எப்போதும் தனி வரவேற்பு உண்டு.தமிழகத்தில் சேலம் மற்றும் மதுரைக்கு அடுத்தபடியாக, வெல்ல உற்பத்தியில் ராஜபாளையம் மிக முக்கியமான இடத்தைப் பிடித்திருந்தது. இங்கு கைமுறையாகத் தயாரிக்கப்படும் 'பச்சை வெட்டு' அச்சு வெல்லம், உருண்டை வெல்லம் மற்றும் நாட்டுச்சர்க்கரை ஆகியவை கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தன.
முன்பு ராஜபாளையத்தைச் சுற்றியுள்ள வத்திராயிருப்பு, கான்சாபுரம், சிவகிரி, ராயகிரி, சேத்தூர், தென்மலை, தேவதானம், உள்ளாறு ஆகிய பகுதிகளில் 10,000 ஏக்கருக்கும் அதிகமாகக் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 25 ஆண்டுகளுக்கு முன் சிவகிரி அருகே தொடங்கப்பட்ட தனியார் சர்க்கரை ஆலை வழங்கிய தொழில்நுட்பம் மற்றும் கொள்முதல் ஆதரவால், பெரும்பாலான விவசாயிகள் வெல்ல உற்பத்தியில் இருந்து சர்க்கரை ஆலைக்கு மாறினர்.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாகச் சர்க்கரை ஆலை நிலுவைத்தொகையை வழங்காததாலும், இயக்கம் நிறுத்தப்பட்டதாலும் விவசாயிகள் கரும்பு சாகுபடியைப் பெருமளவில் குறைத்துவிட்டனர். இதனால் வெல்ல உற்பத்தியும் வீழ்ச்சியடைந்து, பாரம்பரிய வெல்ல உற்பத்தியாளர்கள் மாற்றுத் தொழிலுக்குச் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
0
Leave a Reply