சாத்தூர் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்,சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சி
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஸ்ரீ கிருஷ்ணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து பாதுகாப்பான சமூக வலைதள பயன்பாடு மற்றும் சைபர் குற்றங்களை தடுத்தல், நிதி மேலாண்மை, போட்டி தேர்வுகள் மற்றும் உயர்கல்வி வழிகாட்டி குறித்து நடைபெற்ற கல்லூரி மாணவிகளுக்கான கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் (06.02.2025) தொடங்கி வைத்தார்.
பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுடன் கூடிய அறிவுரை வழங்குதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். குழந்தைகளாக இருக்கும் போது குடும்பம் மற்றும் சமூகத்தின் பார்வை வேறாக இருக்கும். ஆனால், 18 வயது முடிவடைந்த பின் சட்டத்தின் பார்வையிலும், சமூகத்தின் பார்வையிலும் ஒரு பொறுப்பு மிக்கவர்களாகிறீர்கள்.18 வயதிற்கு பிறகு கிடைக்கும் உரிமையோடு, அதனையொட்டி பொறுப்புகளும், கடமைகளும் நம்மிடம் வந்து சேரும். இன்று இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல், இணையதளங்களில் இருக்கக்கூடிய வாய்ப்புகள் பற்றி நாம் தெரிந்து கொள்வதை விட அதிகமாக நமது நேரத்தை வீணடிக்கின்றோம்.
மிக முக்கியமான வயதை எட்டக்கூடிய பருவம் இந்த கல்லூரி பருவம். நீங்கள் இதற்கு முன்பாக சட்டத்தினுடைய பார்வையில் ஒரு சிறுமி. மிகப்பெரிய சட்டத்திற்கு எதிரான தவறை செய்துவிட்டால் கூட உங்களுக்கான தண்டனைகளோ அல்லது உங்களுக்கான சீர்திருத்த முறைகளோ முற்றிலும் வேறுபட்டது. ஒரு 18 வயது அடைந்தவுடன் உங்களுக்கான உரிமைகள் வந்து விடுகிறது. நீங்கள் உங்களை யார் ஆட்சி செய்ய வேண்டும் என்ற அரசியல் தலைமையை தேர்ந்தெடுப்பதற்கான, தேர்தலில் வாக்களிக்கக் கூடிய வாக்காளர் உரிமையை பெறுகிறீர்கள்.ஒரு இருசக்கர, நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுவதற்குரிய ஓட்டுன உரிமைத்தையும் பெறுவதற்கான வயது இந்த வயதுதான். 18 வயதில் தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை துணையை முடிவு செய்வதற்கான குறைந்தபட்ச வயதாகும். உங்களுக்கு உரிமைகள் வருகிறது என்பதை விட மிக முக்கியமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது உங்களுக்கான கடமைகள் மற்றும் பொறுப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
எந்த ஒன்றிற்கும் சரியான புரிதலோடு உண்மையை சரியாக புரிந்து கொள்ளுதல் தான் மிகப் பெரிய திறனாக பார்க்கப்படுகிறது. யாராது ஒருவரை அவருடைய முகமதிப்பு வைத்து நம்புவதற்கு தான் இந்த சமூகத்தில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அவற்றை எல்லாம் தாண்டி நமக்கு இருக்கக்கூடிய அறிவை பயன்படுத்தி அறிவின் துணையோடு எந்த ஒன்றும் சரியானதா இல்லையா என்று புரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அதுவும் குறிப்பாக கல்லூரி மாணவிகள் கல்லூரியை விட்டு வெளியில் செல்லும் பொழுது உங்களுக்கு அதிகமான கடமைகள் இருக்கிறது.எனவே, இந்த வயதில் உங்களுக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்ற பொழுது, அதை எப்படி அதற்காக தயார்படுத்தி கொள்வது, வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்தி கொள்வது, அதுவும் குறிப்பாக ஒரு கிராமப்புற சூழலில் இருந்து வரக்கூடிய மாணவிகளுக்கு இன்னும் என்னென்ன வாய்ப்புக்களை இந்த சமூகம் வழங்குகிறது என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
தங்களுடைய வாழ்க்கையில் பல்வேறு தனிமனித, சமூக, பொருளாதாரத்தில் வாழ்க்கை முழுவதும் வரக்கூடிய சிக்கல்களுக்கு நாம் நம்முடைய அறிவின் மூலமாக நம்மை தயார் செய்து கொள்வது மிக முக்கியம்.
யாரெல்லாம் சிறந்த வெற்றிகளை பெற்று சிறந்த நிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கு எல்லாம் ஒரு பொதுவான பண்புகள் இருக்கிறது. யாருக்கெல்லாம் விழிப்புணர்வுகள் அதிகமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாரும் வெற்றி பெறுகிறார்கள் என்பது தான் அந்த பொதுப்பண்பு.மேலும், மதிப்பெண்கள் மிகவும் முக்கியம். ஆனால் அந்த மதிப்பெண்களோடு விழிப்புணர்வு பெறுவது தான் மிகவும் முக்கியம். கல்வியறிவு என்பது அடுத்தவர்களின் அனுபவங்களை நாம் பெற்று கொள்வது. அந்த அனுபவங்கள் தான் நம் வாழ்க்கையில் எதிர்கொள்ளக்கூடிய தனிமனித, சமூக, பொருளாதார சிக்கல்களுக்கு நமக்கு தீர்வுகளை தருகிறது.
நாம் மனிதனிடத்தில் எதிர்கொள்ளக்கூடிய சிக்கல்களுக்கு நம்முடைய அறிவு துணை செய்கிறது. நாம் படித்து வேலைக்கு சென்று பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு அறிவு தான் துணை செய்கிறது. இதனை தான் திருவள்ளுவர்
அறிவற்றங் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்
என்ற திருக்குறளில், அறிவு என்பது நம்மைத் துன்பத்தில் இருந்து காக்க உதவுகிறது. அறிவிற்கு அந்த திறமை, தகுதி உண்டு. நாம் தான் அந்த அறிவை பெற்றுக்கொள்ளவும், பெற்ற அறிவை பயன்படுத்தி துன்பத்தில் இருந்து காத்துக்கொள்வதும் தொடர்ச்சியான விழிப்புணர்வில் இருக்கிறது.மனிதர்களை மாற்றுவது என்பது அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தான். வாய்ப்புகளை மனிதன் உருவாக்கி கொண்டே இருக்கிறான் அல்லது வாய்ப்புகள் எங்கு எல்லாம் இருக்கிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறான். தேடக்கூடியவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.இந்த காலகட்டத்தில் எதிர்கால திட்டமிடுதல் செய்வது மிகவும் அவசியம். இன்று மனிதனுடைய வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். ஆனால் தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்வதும், அந்த அடையாளத்தோடு வாழ்க்கையினுடைய சிக்கல்களை எதிர்கொள்வதும் குறிப்பாக பொருளாதாரத்தில் ஒருவர் தன்னிறைவு பெறுவது மிக மிக முக்கியமான ஒன்று.ஒரு காலகட்டத்தில் பெண்கள் இந்த சமுதாயத்தில் தாய்மொழி சமூகமாக இருந்தது. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் தலைவியாக இருந்தார். வேட்டைச் சமூகமாக இருந்த பொழுதும் கூட பெண்கள் தான் அந்த வேட்டை சமூகத்தில் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
பெண்களுக்கான விடுதலை என்று சொல்கின்ற பொழுது அவர் விரும்பிய பணியை செய்வது தான் சுதந்திரம். இன்றைய சமூகத்தில் இன்று மட்டுமல்ல எப்பொழுதும் பெண்களுக்கான மிக வலிமையான விடுதலை என்பது அவர்கள் இருக்கக்கூடிய பொருளாதார சுதந்திரம் தான். அதிகமாக பணம் சம்பாதிக்க வாய்ப்புகள் இருக்க வேண்டும். தான் சம்பாதித்ததை தான் உருவாக்கிக் கொண்ட செல்வத்தை முழுமையாக தானே அந்த செல்வத்தின் மீது செல்வாக்கு செலுத்துவதற்கு வாய்ப்புகளும், உரிமைகளும் கிடைப்பதே மிக முக்கியமான பெண்களுக்கான விடுதலை ஆகும்.
அந்த விடுதலை பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும் கல்வி மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தின் துணைக்கொண்டு ஒருவருடைய எதிர்கால வாழ்க்கையின் சிக்கல்களை எதிர்கொள்வதற்கு இது போன்ற நிகழ்ச்சிகள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். எனவே இப்படிப்பட்ட சிந்தனைகள் பெறுவதற்கும், பொருளாதார வலிமை பெறுவதற்கும், நீங்கள் சிந்திப்பதற்கும் உங்களுக்கு வழிகாட்டுவதற்கும் தான் இந்த நிகழ்ச்சி என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, கல்லூரி முதல்வர், கல்லூரி மாணவிகள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply