விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் (21.08.2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில் 16 விவசாயிகளுக்கு கணினி திருத்த பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகை அனைத்தும் வழங்கப்பட்டு விட்டன. அதேபோல், இவ்வாண்டிற்கான கரும்பு ஊக்கத்தொகையானது அரசாணை பெறப்பட்டவுடன் வழங்கப்படும். மேலும், UDR -இல் ஏற்பட்ட பிழையினையும் திருத்த வேண்டும். விவசாயிகளுக்கான அடங்கல் சான்றிதழை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வனவிலங்குகளால் பயிர்களுக்கு ஏற்படும் சேதத்தினை தடுப்பதற்கு வனத்துறை விவசாயிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
மேலும், விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளான அரசின் மூலம் கூடுதலான கண்மாய்களை தூர் வாருவதற்கான நடவடிக்கை, மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுதல், மழை நீரை முழுவதுமாக சேமித்திட வரத்து வாய்க்கால்களை தூர்வாரி முழு அளவில் தயார் செய்தல், பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை தனியார் பங்களிப்புடன் அகற்றிடுதல், மின்கம்பங்கள் மாற்றுவது குறித்த மனுக்களுக்கு தீர்வு காணுதல், சாலை பணிகளுக்காக எடுக்கப்பட்ட நிலங்களுக்கான இழப்பீட்டுத் தொகையினை விவசாயிகளுக்கு வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளுக்கான கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் நகைகளை திரும்ப உரியவரிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு விரைந்து தீர்வு காண சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், மாவட்டத்தில் 3826.7 மெட்ரிக் டன் யூரியாவும், 1927.4 மெட்ரிக் டன் டி.ஏ.பியும், 269.2 மெட்ரிக் டன் முயூரெட் ஆப் பொட்டாசும், 2330.1 மெட்ரிக் டன் கலப்பு உரமும், 357.4 மெட்ரிக் டன் சிங்கிள் சூப்பர் பஸ்பேட் உரமும் என மொத்தம் 8711 மெட்ரிக் டன் உரங்கள் இருப்பு உள்ளது. இதனை, விவசாயிகள் பெற்றுக்கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில் துணை இயக்குனர்(மேகமலை புலிகள் காப்பகம் திருவில்லிபுத்தூர்) திரு.ரவி மீனா இ.வ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.சௌமியன், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் திரு.திருப்பதி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) அ.அம்சவேணி, கோவிலாங்குளம் வேளாண் அறிவியல் நிலையம் பேராசிரியர் மற்றும் தலைவர் திரு.ராமசுப்பிரமணியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், வேளாண்மை துணை இயக்குநர்(வேளாண் வணிகம் மற்றும் விற்பனை) திருமதி த.வளர்மதி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா, உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply