2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் (14.05.2026) மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து 2026 ஆம் ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் கூட்டாய்வு பணிகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வில் தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் கட்டுப்பாடு மற்றும் நடைமுறை படுத்துதல்) விதிகள் 2012-ன் படி, தீயணைப்பு கருவிகள் பொருத்தப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா, உரிய மருத்துவ உபகரணங்களுடன் கூடிய முதலுதவி பெட்டி பொருத்தப்பட்டுள்ளதா, அவசரகால வழிகள் (Emergency Exit) அமைக்கப்பட்டுள்ளதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளதா, உரிய நடத்துநர் உரிமம் பெற்ற உதவியாளர் (Attender), ஓட்டுநருக்கு உதவியாக மாணவ, மாணவியர்கள் உரிய முறையில் வாகனத்தில் ஏறி இறங்கும் பொழுது உதவி புரியும் வகையில் பணியமர்த்தப்பட்டுள்ளாரா, மாணவ, மாணவியர் வாகனத்தின் எளிதாக ஏறும் வகையில் படிக்கட்டின் முதல் படி தரையில் இருந்து 25 செ.மீ இல் இருந்து 30 செ.மீ;-க்குள் உள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளதா, வாகன ஓட்டுநரின் இருக்கைப்பகுதி தனியாக பிரிக்கப்பட்டுள்ளதா, இருக்கைகள் முறையாக வாகனத்தின் தரைதளத்துடன் Bolts மூலம் பொருத்தப்பட்டுள்ளதா, புத்தகப்பைகள் வைத்திட தனியாக Racks அமைக்கப்பட்டுள்ளதா, வாகனத்தின் தரைத்தளம் முழுமையாக ஒன்றாக நல்ல தரத்துடன் பொருத்தப்பட்டுள்ளதா, வாகனத்தின் பக்கவாட்டு ஜன்னல்கள் மாணவ, மாணவியர் கரம், சிரம் நீட்டாதவாறு, மூன்று நீளமாக கிடைமட்ட கம்பிகளால் பொருத்தப்பட்டு பாதுகாப்பாக உள்ளதா என்பது குறித்தும், போதிய பராமரிப்பு உள்ளதா போன்றவை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்புக் கருதி தமிழ்நாடு மோட்டார் வாகனங்கள் (கட்டுப்பாடு மற்றும் நடைமுறைப்படுத்துதல்) சிறப்பு விதிகளின்படி மாவட்ட நிர்வாகம், காவல்துறை, போக்குவரத்துத்துறை, பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் இணைந்து பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்து வருகிறார்கள்.
அதனடிப்படையில், விருதுநகர் போக்குவரத்து வட்டாரத்தில் உள்ள 46 பள்ளிகளைச் சேர்ந்த 249 வாகனங்கள், திருவில்லிபுத்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 27 பள்ளிகளைச் சேர்ந்த 84 வாகனங்கள், சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 38 பள்ளிகளைச் சேர்ந்த 185 வாகனங்கள், அருப்புக்கோட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 43 பள்ளிகளைச் சேர்ந்த 182 வாகனங்கள், இராஜபாளையம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 45 பள்ளிகளைச் சேர்ந்த 177 வாகனங்கள் என மொத்தம் 199 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 877 வாகனங்களுக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.
அவற்றில் 688 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதில் 656 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி உடையவையாக உள்ளன. 32 பள்ளி வாகனங்கள் முழுத்தகுதி இல்லாத காரணத்தினால் தகுதியற்றவையாக நிராகரிக்கப்பட்டுள்ளது. நிராகரிக்கப்பட்ட வாகனங்கள் குறைகளை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு கொண்டு வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. பின்னர், பள்ளி வாகன ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள், மாணவர்களின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு செயல்படுவோம் என்ற உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் ஏற்றுக்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் திரு.மாணிக்கம்(விருதுநகர்), திரு.சந்திரசேகர்(திருவில்லிபுத்தூர்), வேலுமணி(சிவகாசி), சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், வாகன ஆய்வாளர்கள், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், தீயணைப்புத்துறை அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply