வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (11.11.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், சேவைகள், நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சாலைப் போக்குவரத்தை எளிதாக்குதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் தொடர்ச்சியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் சுப்பிரமணியபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பின்னர், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், தாயில்பட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை, சிகிச்சை முறைகள், மழைக்காலம் என்பதால் காய்ச்சலுக்கான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்தும், கோட்டைப்பட்டி கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கை, அவர்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் குழந்தைகளின் வயதிற்கேற்ற உயரம் மற்றும் எடை ஆகியவை குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
கோட்டைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.8.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கழிப்பறை கட்டடம், முத்துச்சாமிபுரத்தில் ரூ.17.25 இலட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையக் கட்டடம், முத்துச்சாமிபுரம் ஊராட்சி, கண்டியாபுரம் கிராமத்தில் ரூ.6.30 இலட்சம் மதிப்பில் விபிஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் நாற்றாங்கால் நர்சரி பண்ணை, கோட்டைப்பட்டி ஊராட்சியில் ரூ.10.95 இலட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்பட்டு வரும் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.
மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும்போது நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதுடன், பணிகளின் தரத்தில் எவ்விதக் குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply