பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135 -ஆவதுபிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வார விழா (ஏப்ரல் 29 முதல் மே 5 வரை) நிகழ்ச்சியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (29.04.2025) பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் 135-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ் வார விழா (ஏப்ரல் 29 முதல் மே 5 வரை) நிகழ்ச்சியின் தொடக்க விழா மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, ஏப்ரல் 29 முதல் மே 5 வரை தமிழ் வார விழா கொண்டாடப்படும் என அறிவித்தார். அதனடிப்படையில் இன்று, விருதுநகர் மாவட்டத்தில் தமிழ் வார விழா கொண்டாடும் வகையில், தொடக்க விழா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில், உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவர் திரு.இல.நிலவழகன் அவர்கள் மற்றும் தலைவர், பாவாணர் கோட்டம் முரம்பு திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
உலகத் தமிழ் கழகத் தலைவர் திரு இல.நிலவழகன் அவர்கள் வாழ்த்திப் உரையாற்றியபோது, பிற மொழித் தாக்கத்திலிருந்து தமிழைக் காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை என்று குறிப்பிட்டார். பாவேந்தரின் தமிழ் மணக்கும் தமிழ் வாரம் சிறக்க வாழ்த்தினார்.பின்னர், முரம்பு பாவாணர் கோட்டத்தின் தலைவர் திரு.அ.இளங்கண்ணன் அவர்கள் உரையாற்றியபோது, புரட்சிக் கவி பாரதிதாசனின் உயிர்ப் புள்ள கவிதை வரிகளைக் கூறி நம் அனைவருக்கும் தமிழ் உணர்வு இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அனைத்து அரசு அலுவலகங்களிலும் குறிப்பாக “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என்ற அரசினுடைய கொள்கையின் அடிப்படையில், அரசினுடைய அரசாணைகள், அலுவலங்கள் மூலம் பொதுமக்களுக்கு அனுப்பக்கூடிய கடிதங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தமிழில் எழுதுவதற்கு ஏற்கனவே விதிமுறைகள் நடைமுறையில் இருக்கிறது. அதை மீண்டும் உறுதிப்படுத்தவதற்காகவும், அரசு அலுவலகங்கள் தமிழில் அலுவலக நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை நினைவு கூறுவதற்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசனுக்கும், விருதுநகருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இன்றிலிருந்து சரியாக 75 ஆண்டுகளுக்கு முன்பாக 1949 ஏப்ரல் மாதம் விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டுக்கு புரட்சி கவிஞர் பாரதிதாசன் அவர்களும் வந்திருந்தார். அந்த மாநாட்டில் திருக்குறள் எந்த அளவிற்கு அனைத்து மக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டியது என்பது குறித்து அவர் மிக தீவிரமாக பேசி, திருக்குறள் அரசினுடைய வழிமுறைகளில், கல்வி நிலையங்களில், பொதுமக்களுக்கும் அதனுடைய கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
அதாவது ஒரு பண்டிதர் நிலையிலிருந்து பாமர நிலைக்கு எல்லோருக்கும் எடுத்து செல்ல வேண்டும் என்ற ஒரு மிகப்பெரிய மாற்றத்தை தொடங்கியது, விருதுநகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாடு தான். அந்த மாநாடு நடைபெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இன்று பாரதிதாசனுடைய பிறந்த தின விழாவை நாம் விருதுநகரில் கொண்டாடுவது என்பது பெருமைக்குரியது.
பாரதிதாசன் நமக்கெல்லாம் வழிகாட்டுதலுக்குரிய ஒரு கவிஞர். பாரதிதாசனுடைய எல்லா பாடல்களும் அவர் சமூகத்திற்கு வழங்கிய 40 ஆண்டுகாலம் எழுதிய பாடல்கள், அவர்களின் கட்டுரைகள், அவர் எழுதிய கவிதைகள் அவர் பேசிய பேச்சுகள் எல்லாவற்றையும் தொகுத்துப் பார்த்தால் பாரதிதாசன், தமிழ்நாடு குறித்து மூன்று கனவுகளை கண்டார். தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற அவர் கண்ட கனவுகள் இன்றைக்கும் நம்மை வழி காட்டக்கூடியதாகவே இருக்கிறது.
மொழி குறித்து பேசுகின்ற பொழுது, மொழி என்பது ஒரு வாழும் நிலப்பகுதியில் மக்கள் அனைவரும் பேசக்கூடிய ஒரு தகவல் தொடர்பு கருவி மட்டுமல்ல, அது ஒரு உணர்ச்சிகளின் தொகுப்பு. அவர்களுடைய பண்பாடு. அவர்கள் தங்களது வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும் பெறுவதற்கு மொழிதான் அடிப்படையாக இருக்கிறது என்று பேசி, அப்போதைய காலகட்டத்தில் மட்டுமல்ல இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இந்த சமுதாயம், இந்த நாடு தொழில்நுட்பத்தில்; முன்னேறுகின்ற பொழுது எப்படி மொழி இருக்க வேண்டும் என்பது குறித்து கனவுகளை கண்டார்.அனைத்து அரசு அலுவலக வணிக நிறுவனங்களும் தங்களுடைய பெயர்களை தமிழில் வைக்க வேண்டும் என்ற உத்தரவை தற்பொழுது அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்துகின்றது. இந்த பிரச்சனையை ஒரு 80 ஆண்டுகளுக்கு முன்பாக பாரதிதாசன் பதிவு செய்கிறார்.
இதெல்லாம் நிச்சயமாக அரசினுடைய திட்டங்களை, அரசினுடைய கொள்கைகளை செயல்படுத்தக்கூடிய இடத்தில் இருக்கும் நம்மை போன்ற அரசு அலுவலர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரசினுடைய சேவைகள் கிடைக்கக் கூடிய அளவிற்கு நம்முடைய செயல்பாடுகள் இருக்கும் என்றால் அதுதான் பாரதிதாசன் கண்ட தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற மூன்று மிகப்பெரிய கனவுகளில் ஏழை எளிய மக்களை அடிப்படையாகக் கொண்டது. எளிய மனிதர்களுக்காக நாம் உழைக்க வேண்டும் என்ற தத்துவத்தை தான் இன்றைய தமிழ் வார விழாவில் அரசு அலுவலர்கள் பெற்றுக் கொள்ள வேண்டியது. அதைப் பெற்றுக் கொள்வதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், தமிழ் ஆட்சிமொழித் திட்ட செயலாகத்தில் சிறந்து விளங்கிய 5 அலுவலகங்கள் மற்றும் 5 அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேடயங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
0
Leave a Reply