சிவகாசி மாநகராட்சியில் ரூ.15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை அமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி விஸ்வநத்தத்தில், நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், (06.10.2025) நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி மாநகராட்சி மேயர் திருமதி சங்கீதா இன்பம் அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 10.11.2024 அன்று விருதுநகர் மாவட்டம் பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் ஒரு முக்கியமான அறிவிப்பாக சிவகாசி மாநகராட்சியில் ரூபாய் 15 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டு அரங்கம் அமைக்கப்படும் என தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள் அனைத்தும் அரசாணைகளாக உருவம் பெற்று அவற்றை செயல்படுத்துவதற்கான நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
வணிக நிறுவனங்கள் நிறைந்த ஊராக சிவகாசி திகழ்கிறது. மேலும், இங்கு வணிகம் என்பது உலகளாவிய வர்த்தகமாக உருப்பெற்று உள்ளது. இங்கு அமையவுள்ள மாநாட்டு மையம் மிக முக்கியமான தேவையாக உள்ளது.முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் நீண்ட கால முதலீட்டுத் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து, நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சென்னையில் நந்தம்பாக்கத்தில் அமையப்பெற்ற வர்த்தக மையமானது இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தக்கூடிய அளவிற்கு புதுப்பொலிவுடன் திகழ்கிறது.
மகாபலிபுரத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பெயரில் செயல்படக்கூடிய சர்வதேச கூட்டரங்கமானது, சென்னைக்கு வருகை புரியும் வணிக நிறுவனங்கள் மாநாட்டை நடத்தவதற்கு ஏதுவாக அமைய பெற்றுள்ளது.அவ்வரிசையில் இன்று ஒரு முக்கிய வணிக நிறுவனமான, கேந்திர ஸ்தானமாக திகழக்கூடிய இந்த சிவகாசி மாநகர், விஸ்வநத்தத்தில் இந்த மாநாட்டு அரங்கம் அமையவுள்ளது மிகச்சிறப்பானது.ஏறத்தாழ இந்த இடத்தின் ஒட்டுமொத்த பரப்பளவும் 3 ஏக்கர் அளவில் இருக்கிறதென்றால், தரைத்தளத்தில் சுமார் 3200 சதுர மீட்டர் மற்றும் மேல் தளத்தில் 3200 சதுர மீட்டர் என்கிற மிகப்பெரிய அளவிலும், ஒரே நேரத்தில் 2000 முதல் 2500 நபர்கள் அமர்ந்து கூட்டங்களை நடத்துவதற்கு ஏதுவாகவும், வாகனங்களை நிறுத்துவதற்கு வசதிகளையும் உள்ளடக்கி இக்கூட்டரங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
எனவே, இம்மாநாட்டு அரங்கு என்பது சிவகாசி மாநகரத்திற்கு கிடைத்துள்ள மிக முக்கியமான வரப்பிரசாதம். அதனை, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று உருவாக்கி தந்துள்ளார். அத்தகைய திட்டங்களை உருவாக்கித் தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு சிவகாசி மாநகராட்சி சார்பில், விருதுநகர் மாவட்ட மக்களின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இப்பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தான் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் இலக்கு. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.சரவணன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா, முன்னாள் சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவர் திரு.விவேகன்ராஜ் உட்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply