தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் சிவகாசி - திருத்தங்கலில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி - திருத்தங்கலில் புதிய இரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில்(18.01.2026) பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பொதுமக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான போக்குவரத்தை உறுதி செய்வதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, நகர்ப்புறங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான பல்வேறு உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சிவகாசி - திருத்தங்கல் சாலையில் இரயில் போக்குவரத்திற்காக அடிக்கடி மூடப்படுவதால், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் இப்பகுதி பல தொழிற்சாலைகள், பள்ளிகள், கல்லூரிகள் இயக்கும் இடமாக இருப்பதால், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மிகுந்த சிரமத்தை களையும் வகையில், ரூ.45.60 கோடி மதிப்பில் 609.28 மீ நீளம், 8.5 மீ அகலத்தில் 17 தூண்களுடன் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேம்பாலம் கட்டும் பணிகளின் முன்னேற்றம், மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் பணிகளை நிறைவு செய்வதற்கான கால அட்டவணை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து, பணிகள் நடைபெறும் பகுதிகளில் தேவையான தடுப்புகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் போக்குவரத்து வழிகாட்டுதல்களை முறையாக அமைத்து, எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் மேற்கொள்ளப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் பண்டிகை காலங்களில் நெரிசலை தடுக்க மாற்று வழிகளை பயன்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திருத்தங்கல் புதிய இரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து, தரமான முறையில் நிறைவு செய்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், நெடுஞ்சாலைத்துறை திருநெல்வேலி கோட்ட பொறியாளர் திரு.லிங்குசாமி(திட்டங்கள்), சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமதி இர்பான் I A S., சிவகாசி மாநகராட்சி ஆணையர் திரு.கண்ணன், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply