25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >>


விருதுநகர் மாவட்டத்தின் இரு கண்கள் - கல்விக்கு ‘திசை’..வாழ்விற்கு ‘உயிர்’!  திசை’யால் உயரும் கல்வி..‘உயிர்’ பெறும் வாழ்வாதாரம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டத்தின் இரு கண்கள் - கல்விக்கு ‘திசை’..வாழ்விற்கு ‘உயிர்’! திசை’யால் உயரும் கல்வி..‘உயிர்’ பெறும் வாழ்வாதாரம்.

ஒரு சமூகத்தின் உண்மையான வலிமை அதன் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தில்தான் அடங்கியுள்ளது.

 அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் “திசை” மற்றும் “உயிர்” ஆகிய இரண்டு சிறப்புத் திட்டங்கள், மாவட்டத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்கால நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் அடித்தளமாக அமைந்துள்ளன."

விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் தொலைநோக்கு பார்வையுடன், சமூகப் பொறுப்பு நிதி (CSR) மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி(District Mineral Fund) யைப் பயன்படுத்தி இத்திட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

 திசை: 

கனவுகளைத் துரத்தும் மாணவர்களுக்கான கலங்கரை விளக்கம்

பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பதே ‘திசை’ திட்டத்தின் பிரதான நோக்கம்.

 கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது 

கள ஆய்வு மற்றும் மாணவர்களின் புதிய பாதை: 

  சுமார் 662 மாணவர்களுடன் அதிகாரிகள் நேரில் கலந்துரையாடினர். அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி, மாணவர்களின் சூழலை நேரில் கேட்டறிந்ததோடு, அவர்களது கல்வித் தடைகளை நீக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.

    இதன் விளைவாக 78 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளிலும், 14 பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தங்களது கல்விப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.

சிகரம் தொடு: தேசியத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி: 

      அரசுப் பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி (IIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைய ஏதுவாக ‘வெற்றிப் பள்ளி’ பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் JEE தேர்வில் 11 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். NEET தேர்விற்காக 407 மாணவர்களின் கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே ஏற்று, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.மேலும், 1,656 மாணவர்கள் ஆண்டு முழுவதும் நடைபெறும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தொடர் கண்காணிப்பு: 

  மாணவர்களின் முன்னேற்றத்தை ஓராண்டு முழுவதும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேகக் ‘கல்வி கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டு, வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.

உயிர்: 

தற்சார்பு வாழ்வாதாரத்திற்கான உன்னத முயற்சி

 பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் மற்றும் சட்டத்துடன் முரண்படும் நிலையில் உள்ள (Children in Conflict with Law) இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘உயிர்’ திட்டம் (தொடக்கம்: ஜனவரி 13) வடிவமைக்கப்பட்டுள்ளது.

 இளஞ்சிறார்களுக்கான மறுவாழ்வு:

கடந்த 2026 மார்ச் 5 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாக்களில், சட்டத்திற்கு முரண்பட்ட இளஞ்சிறார்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில் கருவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து (DMFT) ரூ.1,71,315 மதிப்பிலான உபகரணங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டன.

உயிர் துரித உணவகம்:

இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ‘உயிர் துரித உணவகம்’ (UYIR Fast Food) அமைப்பதற்கான நடமாடும் தள்ளுவண்டி உணவகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மூலம் கௌரவமான வாழ்வைப் பெற வழிவகை செய்கிறது.

திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்:

 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில், தையல் பயிற்சிக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 பேர் பயிற்சியை முடித்துள்ளனர்.

 பேக்கரி மற்றும் குக்கீஸ் தயாரிப்பு பயிற்சியில் 10 பேர் சொந்தமாகத் தொழில் தொடங்கத் தயாராக உள்ளனர்.

உயிர் டிப் டீ: 

 சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 30 பேர் இதில் பயிற்சி பெற்றுள்ளனர்.

புதிய வாய்ப்புகள்: 

 ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது.

 தற்போது மானிய விலையில் ஆட்டோ வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒரு இளைஞரும், ஒரு ஆதரவற்ற இளம் பெண்ணும் முதற்கட்டப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய அளவில் அங்கீகாரம்:

        விருதுநகர் மாவட்டத்தின் இந்தத் தற்சார்பு மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், கடந்த நான்கு மாதங்களில் ‘திசை’ மற்றும் ‘உயிர்’ திட்டங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்துள்ளன. 

 இத்திட்டங்கள் வெறும் அரசுத் திட்டங்களாக மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து, அவர்களைத் தற்சார்புப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது.மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால், இத்திட்டங்கள் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக இளஞ்சிறார்கள் மற்றும் பெண்களின் மறுவாழ்விற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன.

 இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை சமூக மாற்றத்திற்கான ஒரு வலிமையான பங்களிப்பை வழங்குகிறது. "தனிமனித முன்னேற்றமே சமூகத்தின் முன்னேற்றம் என்ற கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் இத்திட்டங்கள், வரும் காலங்களில் இன்னும் பல எளிய மக்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.”

உயிர் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளி தெரிவிக்கையில் 

எனது பெயர் மாரீஸ்வரன். நான் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ராம் நகரில் பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். 

 முன்னதாக நான் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தேன். தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உயிர் திட்டத்தின் கீழ் எனக்கு பேட்ச் ஓட்டுநர் உரிமை இலவசமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எனக்கு புதிய ஆட்டோவினை வழங்க இருக்கிறார்கள்.  

 இந்த ஆட்டோ மூலம் என் வாழ்வாதாரத்தை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

கைப்பேசி எண்: 88381 01609

திசை திட்டத்தின் கீழ் உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தெரிவிக்கையில்:

          நாங்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, அருகில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று பயிலாம் என்று நினைத்திருந்தோம்.மேலும் மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பயில்வதற்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும் மிகவும் சிரமம் என்றும், அதற்காக செலவு நிறைய ஆகும் என்றும் ஒரு எண்ணம் இருந்தது. 

        ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் திசை என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் எங்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நீட் நுழைவுத் தேர்வுக்கு சுமார் 310 மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர். 

        ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு 79 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, முதன்மை தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தற்போது தனியார் போட்டித்தேர்வு மையத்தில் மேல்நிலைத் தேர்வுக்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 இதற்கான செலவுகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமே வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எங்களுக்கு இலவசமாக வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News