அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகள்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பாதுகாத்திடவும், அதிகப்படியான மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக வெற்றிப்பள்ளிகள் திட்டம் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டி புத்தகங்களும், எழுதுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் சூழ்நிலை தவிர்க்கப்படுவதோடு, அனைத்து மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பயிற்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விருதுநகர் த.பெ.நா நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி அ.உ.நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர் திரு.வி.க. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியாஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 7 பள்ளிகளில் 1209 மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ மற்றும் க்யூட் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.
இதன் மூலம் அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற மாணவர்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்படுகிறது. ஆசிரியர்களை மாணவர்களிடம் கனிவாகவும், புரியும் வண்ணமும் பாடங்கள் நடத்தியும், தொடர்ந்து தேர்வுகள் நடத்தியும் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக, பள்ளிப்படிப்பில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, 3 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மீண்டும் கல்வி தொடர அறிவுறுத்தினார் .ஆய்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply