உலக மக்கள் தொகை தினம்-2026 முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் (11.07.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினம்-2026 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் என்பது நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடையூறாக திகழ்கின்றது . மக்கள் தொகை பெருக்கும் குறிக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அது குறித்த உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது
இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினம் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும் திட்டமிடப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காகவும் கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2026 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மக்கள்தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, நகர வளர்ச்சித்துறை, உணவு மற்றும் பொ து விநியோகம், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.
போதிய கர்ப்ப இடைவெளியினால், தாயின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் வரை கொடுப்பதால் தாய் மற்றும் சேய் நலம் மேம்படுவதுடன், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான எடை அதிகரிக்கிறது. இதனால் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைகிறது.
தாய் மற்றும் குழந்தையின் நல்வாழ்வுக்கு 20 வயதிற்கு பிறகு முதல் கர்ப்பம் ஆவது சிறந்தது. இரண்டு பிறப்புகளுக்கு இடையில் குறைந்தது 3 வருட இடைவெளி மற்றும் கருக்கலைப்புக்குப் பிறகு குறைந்தது 6 மாத இடைவெளி இருப்பது நல்லது.
குடும்ப நலத் தேவைகளை பூர்த்தி செய்வதில், தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கருத்தடை உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும் கருக்கலைப்பு தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படும்.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளான, தற்காலிக குடும்ப நல சேவைகள்(ஐயுசிடி பொருத்துதல் ஊசி மூலம் கருத்தடை ), நிரந்தர குடும்ப நல சேவைகள்(பெண்களுக்கான கருத்தடை முறைகள் ஆண்களுக்கான கருத்தடை முறைகள்) ஆகிய குடும்ப நலத்திட்டமிடல் சேவைகள் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.
பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை (டியூபெக்டமி, லேப்ராஸ்கோபிக்) எளிமையானவை. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சி கிச்சை (நவீன வாசக்டமி ) எளிமையானது. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
இதுபோன்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மருத்துவத் துறையினரின் கடமை. எனவே ஒட்டுமொத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், வளமான குடும்பம், வலிமையான குடும்பம்; வளர், இளம் பெண்களை காப்போம்;, வேண்டாம், வேண்டாம் இளம் வயது திருமணம் வேண்டாம்;, போதும் போதும் ஒரு குழந்தை போதும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.
முன்னதாக, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
மேலும், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply