விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலைக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலைக்குறிச்சி கிராமத்தில் (02.10.2026) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.
இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும் என மொத்தம் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.
கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்கறையுடன் திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றி குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் தூய்மைப் பணியாளர்களின் சுமை குறைவதோடு நமது சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக அமையும். தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் அனைவரும் வீட்டிலுள்ள தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதால் ஏடிஎஸ் கொசு உற்பத்தி ஆவதை தடுக்க முடியும்.
அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படும் எனவும், பேருந்து நிறுத்தம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2026 முதல் 30.09.2026 வரையிலான கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம், சிறுபாசனங்கள் , குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கபட்டது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.ஆறுமுகம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.முருகானந்தம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் (விருதுநகர்) மரு.யசோதாமணி, அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply