மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 277 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வெம்பக்கோட்டை கிராமத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் (11.11.2026) நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.
அதன்படி வெம்பக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 05 பயனாளிகளுக்கு ரூ.2.10 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.41.28 இலட்சம் மதிப்பில் இணையவழி பட்டாக்கள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 65 பயனாளிகளுக்கு ரூ.36.55 இலட்சம் மதிப்பில் இணையவழி பட்டாக்கள், 75 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், 06 பயனாளிகளுக்கு ரூ.79,000 மதிப்பில் உழவர் பாதுகாப்பு உதவித்தொகைகள், சுகாதாரத்துறை சார்பில் 05 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.10,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், வேளாண்மைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.1.06 இலட்சம் மதிப்பிலான இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.8,400/- மதிப்பில் மரக்கன்றுகள், 25 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், கால்நடைத்துறை சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.2,500 மதிப்பிலான ஊட்டச்சத்து கலவை, 03 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.4.50 இலட்சம் மதிப்பில் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கடனுதவிகள் என மொத்தம் 277 பயனாளிகளுக்கு ரூ.1.65 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.
முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர்(பொறுப்பு) திருமதி சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், துணை ஆட்சியர் (பயிற்சி) பி.பிரியதர்ஷினி, வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திரு.ஆனந்தராஜ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply