திருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில்அமைக்கப்பட்டுள்ள புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் மருத்துவ சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இலுப்பையூர் கிராமத்தில், ரூ.1.20 கோடி மதிப்பில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கப்பட்ட புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் (08.07.2025) குத்துவிளக்கேற்றி மருத்துவ சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார்.பின்னர், மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின் கீழ், பயன்பெறும் பயனாளிகளுக்கான மருந்து பெட்டகங்களையும், தாய்மார்களுக்கு தாய் சேய் நலப் பெட்டகங்களையும் நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் மூலம் மருத்துவ சேவைகள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் செயலாற்றி வருகிறது. கடந்த நான்காண்டு ஆட்சியில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தரம் மற்றும் சேவைகள் மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது.இந்திய அளவில் சுகாதாரத்தில் தமிழ்நாடு தான் முன்னிலையில் இருக்கிறது. நம்மை காக்கும் 48, இன்னுயிர் காப்போம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி மருத்துவம் போன்ற திட்டங்கள் அனைத்தையும் தமிழக அரசு தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்தி வருகிறது.
மேலும், இலுப்பையூர் மற்றும் அதனைச் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் மருத்துவ சேவைகளுக்காக சுமார் 30 கி.மீ தூரமுள்ள திருச்சுழி, நரிக்குடி, கமுதி ஆகிய அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளதால், இப்பகுதியில் மருத்துவ சேவை வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையின் அடிப்படையில், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என்ற முக்கியத்துவத்தை பலமுறை வலியுறுத்தி, தற்போது இலுப்பையூரில் ரூ.1.20 கோடி மதிப்பில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 03.07.2025 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தில் பிரசவ அறை, பிரசவ வார்டு, மருத்துவ அலுவலர் அறை, ஊசி போடும் அறை, மருந்து கட்டும் அறை, அவசர சிகிச்சை வார்டு, ஆய்வகம், மருந்தகம், தொற்ற நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 3250 சதுர அடி பரப்பளவில் சுகாதார நிலையம் உள்ளது. இது ஒரு தொடக்கம் தான். இது போன்ற மக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடர்ச்சியாக மேம்படுத்துவதற்கான பணிகளையும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு தொடர்ந்து செயல்படுத்தும். எனவே, மருத்துவ சேவைகளை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு, சுகாதாரம் நன்றாக இருந்தால் தான் மக்கள் நன்றாக இருப்பார்கள், மக்கள் நன்றாக இருந்தால் தான் நாடு முன்னேறும் என்ற நோக்கில் சுகாதாரத்திற்கு மிகுந்த முனைப்போடு செயலாற்றி வருகிறது.
இலுப்பையூர் மற்றும் அதனை சுற்றி வசிக்கும் கிராம மக்கள் மருத்துவ சேவை பெறுவதற்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதனை சரிசெய்து அருகிலேயே அவர்களுக்கான மருத்துவ சேவைகளை வழங்கும் வகையில் அமைச்சர் பெருமக்கள் அவர்களின் ஒத்துழைப்போடு இங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக பொதுமக்கள் சார்பில், மாவட்ட நிர்வாகம் மூலம் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டாட்சியர், உள்ளாட்சி பிரதிநிதிகள், மருத்துவப் பணியாளர்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply