பூமியை விட வயதான விண்கல்... வீட்டுக்குள் விழுந்த அதிசயம்!
விண்கற்கள் அடிக்கடி பூமியை வந்தடைகின்றன. ஆனால் பெரும்பாலானவை சிறியதாக இருப்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. சமீபத்தில் அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
செர்ரி பழத்தின் அளவிலான ஒரு சிறிய விண்கல், வீட்டின் கூரை, சீலிங் மற்றும் காற்றோட்டக் குழாயை துளைத்துக் கொண்டு, துப்பாக்கி குண்டின் வேகத்தில் வீட்டிற்குள் பாய்ந்து தரையில் விழுந்தது. இந்த விண்கல்லுக்கு அது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் பெயரான "மெக்டோனா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
சுமார் 50 கிராம் எடையுள்ள இந்த விண்கல்லில் 23 கிராம் மாதிரியை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், இது ஆக்சிஜன், மெக்னீசியம், இரும்பு மற்றும் சிலிக்கான் நிறைந்த காண்ட்ரைட் (Chondrite) வகையைச் சேர்ந்தது என்பதை கண்டறிந்தனர்.
மேலும், இந்த விண்கல்லின் வயது சுமார் 456 கோடி ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பூமியின் வயது சுமார் 454 கோடி ஆண்டுகள் என்பதால், இந்த விண்கல் பூமியை விட பழமையானது என்பது ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
வியாழன் மற்றும் செவ்வாய் கோள்களுக்கு இடையே உள்ள சிறுகோள் வளையத்தில் ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்த விண்கல் உருவாகியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தொடர்ந்து நடைபெறும் ஆய்வுகள், சூரியக் குடும்பத்தின் தோற்றம் குறித்து புதிய தகவல்களை வெளிக்கொணரலாம்.
0
Leave a Reply