திருவில்லிபுத்தூர் நகராட்சியில் பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர்த் திட்டப் பணிகள் ,திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் நேரில் கள ஆய்வு.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (10.06.2026) நேரில் சென்று பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அரசு திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் புதிய கிணறுகள்:
பின்னர், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2025-26 திட்டத்தின் கீழ், ரூ.9.85 கோடி மதிப்பீட்டில் மூன்று இடங்களில் புதிதாக கிணறுகள் அமைக்கப்பட்டு வரும் நிலையில் செண்பகத்தோப்பு பேயனாற்றுப் படுகையில் கட்டப்பட்டு வரும் திறந்த வெளி கிணற்றினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவில்லிபுத்தூர் நகராட்சியின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைச் சமாளிக்க, இந்த உயர் கொள்ளளவு கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பேயனாற்றுப் படுகை கிணற்றின் கட்டுமானப் பணிகளைப் பருவமழை தொடங்குவதற்கு முன்னதாகவே, அதாவது திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வர மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
திருவில்லிபுத்தூர் பழைய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2024-25):
கலைஞர் மேம்பாட்டுத் திட்டம் 2024-25 திட்டத்தின் கீழ், ரூ.3.25 கோடி மதிப்பீட்டில் பழைய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு, பேருந்து நிலைய தரைத்தளம், பயணிகள் நிழற்குடை, வணிக வளாக கடைகள் மற்றும் கழிவறைகளின் கட்டுமானத் தரத்தை (Structural Stability) பொறியாளர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கான குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி மற்றும் பேருந்துகள் வந்து செல்வதற்கான விசாலமான அணுகுசாலை (Approach Roads) போன்றவற்றைத் தரமாக அமைக்க அறிவுறுத்தப்பட்டது.
அம்மா உணவகம் – ஆய்வு
திருவில்லிபுத்தூர் நகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுவை மற்றும் பயன்படுத்தப்படும் குடிநீரின் தூய்மைத் தன்மையை ஆய்வு செய்தார். சமையலறை மற்றும் பாத்திரங்களை நாளும் மிகத் தூய்மையாகப் பராமரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
திருவில்லிபுத்தூர் புதிய பேருந்து நிலையக் கட்டுமானப் பணி (KNMT 2023-24):
தொடர்ந்து, கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் (KNMT) 2023-24 திட்டத்தின் கீழ், ரூ.16.60 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தொடர்ந்து, திருவில்லிபுத்தூர் நகராட்சியில் திரௌபதி அம்மன் கோவில் தெருவில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரின் தரம் மற்றும் விநியோகிக்கப்படும் கால அளவு குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டறிந்தார். மேலும், நீரிலுள்ள குளோரின் (Chlorine) அளவு சரியான விகிதத்தில் உள்ளதா என சோதனை செய்யப்பட்டது.
கோடைக் காலத்தைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு எவ்வித தடையுமின்றிச் சீரான குடிநீர் விநியோகத்தை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். குழாய் உடைப்புகள் அல்லது குடிநீர் வீணாகுதல் போன்ற புகார்கள் வந்தால் 24 மணி நேரத்திற்குள் சரி செய்யப்பட வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்நிகழ்வின் போது, திருவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர், நகராட்சிப் பொறியாளர்கள், வட்டாட்சியர், குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply