ஹாங்காங் ஓபன்: காலிறுதியில் இந்திய வீரர்கள்.
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் தொடரின் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, லக்சயா சென், ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
ஹாங்காங்கில் நடைபெற்று வரும் 'சூப்பர் 500' அந்தஸ்து பெற்ற இத்தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் ரக்ஷிதா ஸ்ரீ, சீனாவின் சென் யு பெய்யை எதிர்கொண்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனும், உலகத் தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான சென் யு பெய்க்கு எதிராக சிறப்பாக விளையாடிய 19 வயதான ரக்ஷிதா ஸ்ரீ 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், டென்மார்க்கின் ராஸ்மஸ் ஜெம்கேவை எதிர்கொண்டார். 38 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் லக்சயா சென் 21-11, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், தென்கொரியாவின் யூ டே பின்னை 12-21, 21-18, 21-14 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் இரட்டையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் - சிராக் ஷெட்டி ஜோடி, மலேசியாவின் நூர் முகமது அஸ்ரியன் - டான் வீ கியோங் ஜோடியை 21-19, 21-16 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
0
Leave a Reply